மோடி – ஜின்பிங் சந்திப்பு விவகாரம் : ஸ்டாலின் வாழ்த்து – பா.ஜ. பாராட்டு

BJP praises MK Satlin : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ உள்ளது. இந்த சந்திப்பு விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், எப்போதும் இதுபோல ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்று ஸ்டாலினுக்கு பாரதிய ஜனதா கட்சி பாராட்டு…

By: October 9, 2019, 8:48:07 AM

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ உள்ளது. இந்த சந்திப்பு விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், எப்போதும் இதுபோல ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்று ஸ்டாலினுக்கு பாரதிய ஜனதா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.
இந்த விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை.

இதனிடயே, மோடி – ஜின்பிங் சந்திப்பு தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன்.

சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுடன் சீனப் பெருந்தலைவர் மாவோ நடத்திய மகத்தான பேரணியை அடுத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949-ம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது.

உழைக்கும் வர்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த அக்டோபர் 1-ம் நாள் நடத்திவிட்டுத் தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார்கள். அதே 1949 ஆம் ஆண்டுதான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமும் அண்ணாவால் தொடங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும் தனது 70-வது ஆண்டு விழாவைப் போற்றிக் கொண்டு இருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது. இந்திய – சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பா,ஜ, பாராட்டு : ஸ்டாலினின் இந்த அறிக்கையை தற்போது தமிழக பாஜக வரவேற்று டுவிட் செய்துள்ளது. அதில், ”பிரதமர் மோடியையும் சீன அதிபரையும் வரவேற்கும் மு.க ஸ்டாலினுக்கு நன்றி.என்றும் இதுபோல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழகத்துக்கு நன்மையே பயக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Modi xi xinping meet mk stalin congratulate state bjp praises

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X