பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக பேட்டியளித்திருந்த நிலையில், தமிழ் சினிமா இயக்குனரான மோகன் ஜி-யை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாக தமிழ் சினிமா இயக்குனர் மோகன் ஜி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அதில் தொடர்ந்து பேசிய அவர், "நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டேன்.
அது தொடர்பான செய்தியை வெளியே வர விடாமல், வேறொரு வழக்கு போட்டு அதனை முடித்து விட்டார்கள். எனக்கு அங்கு வேலை செய்யும் மக்கள், கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக தெரிவித்தனர். அதில் வேலை செய்யும் யாரோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று கூறினர். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலேயுமே நடக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக பேட்டியளித்திருந்த தமிழ் சினிமா இயக்குனரான மோகன் ஜி-யை சென்னை போலீசார் கைது செய்தனர். அவரை அவரது காசி மேடு இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இந்நிலையில், பழனி பஞ்சாமிருதம் குறித்து சர்ச்சை கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை இன்று காலை திருச்சி சைபர் கிரைம் போலீசார் சென்னையில் உள்ள அவரது காசி மேடு இல்லத்தில் கைது செய்தனர். இதனையடுத்து, அவரை திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன் ஜி பேசிய சொற்கள் தவறாக இருந்தாலும், போலீசார் அவரை கைது செய்ததற்கான உரிய காரணங்களை தெரிவிக்காததால் இந்த வழக்கிலிருந்து அவரை சொந்த பினையில் விடுவிப்பதாக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.