சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரனுடன் நேற்று இரவு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் உடன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பழகி வந்ததாகவும், அதன் பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்த பரத், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தன்னிடம் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாகவும், அதுமட்டுமின்றி கடனுக்கான மாதத் தவணையை சில வருடங்கள் செலுத்தி வந்ததாகவும் கூறியிருந்தார். இது தவிர நகையை அடமானம் வைத்து பரத்துக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பரத்திற்கு திவ்யா என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாகவும், மேலும் வசதி படைத்த பல பெண்களுடன் சமூக வலைதளம் மூலம் தகாத முறையில் பேசி வந்ததும் தெரிய வந்ததாக பெண் புகாரியில் கூறியுள்ளார். இதனால் பரத் மோசடி பேர்வழி என தெரிய வந்து அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவரும் அவரது தந்தையும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ நிலையம் அருகே தனது சகோதரனுடன் நடந்து சென்ற போது பரத் காரில் வந்து தன்னை ஏற்றி கொல்ல முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். அதை தடுத்த தனது சகோதரனை காரில் இடித்து கடுமையான காயம் ஏற்பட செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“