சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறி இருப்பதால், அவரை அரசு மருத்துவமனையின் தனிப்பிரிவில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் 28 வயதான பயணி ஒருவர் வந்திருந்தார். அவரை விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, காய்ச்சல், உடல் சோர்வு, உடலில் சில கொப்பளங்கள் உள்ளிட்டவை அவரிடம் காணப்பட்டன.
இதனால், அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரை அரசு மருத்துவமனையின் தனிவார்டில் அனுமதித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். முன்னதாக, கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நாடு முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
கொரோனா தொற்று போன்று காற்றில் பரவும் தன்மை குரங்கம்மை நோய்க்கு இல்லையென்றாலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவருடன் இரண்டு மீட்டர் தொலையில், மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருப்பவர்களுக்கு, நீர்த்துளிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“