மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள்பட்டியில் குடியிருப்பு பகுதியில் புகுந்து, உணவு பொருட்களை சேதம் செய்யும், குரங்குகளைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்களையும், துணிகளையும் குரங்குகள் சேதம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/Pna1iIHdTsppHiBwpgKM.jpg)
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் இளைஞர் முத்துபாண்டி கூறியதாவது; ஒரு வருடத்திற்கு முன்பு 20 குரங்குகள் மட்டுமே இருந்தன. தற்போது அது பெருகி 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்துள்ளனர். விவசாயத் தோட்டங்களில் இருக்கக்கூடிய தென்னை, மாமரம், வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குரங்குகளால் தங்களுக்கு பெரிதளவில் நஷ்டம் ஏற்படுகிறது. உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் வரும் குரங்குகள், உணவு கிடைக்கவில்லை என்றால், பொதுமக்களை விரட்டி விரட்டி அச்சுறுத்துகின்றன.
பகல் நேரங்களில் மிரட்டும் குரங்குகள் மாலை நேரங்களில் கூட்டம், கூட்டமாக வீதிகளில் சுற்றித் திரிகிறது. மேலும், திறந்து இருக்கும் வீடுகளில் நுழையும் குரங்குகள் அங்கு சமையலறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் தக்காளி, வாழைப்பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/h8gbUkI2oDSUgIyclU1p.jpg)
இதனால், குரங்குகள் எப்போது வீட்டுக்குள் நுழையுமோ என்ற அச்சத்தில் பெண்கள் உள்ளனர். குழந்தைகள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களை கூட குரங்குகள் பிடுங்கி சாப்பிடுகின்றன. இந்த குரங்குகள் குழந்தைகளை கடித்து விடுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. துணிகள் துவைத்து காய வைத்தால், அந்த துணிகளை அங்கும் எங்கும், தூக்கி கீழே போட்டு விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகம், வனத்துறை இப்பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெருமாள்பட்டி கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.