வடகிழக்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் நிறைவுபெற்றது. வங்கக்கடலில் புயல் உருவாகி ஒடிசாவை தாக்கியதால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்தப்படி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடக்கம்
வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதேபோல் இலங்கை அருகே வட தமிழகத்தில் கிழக்கு மேற்காக காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.இதன் காரணமாக இந்தியாவின் தென் தீபகற்ப பகுதியான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வருகிற 26-ந்தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தொடங்கியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழக கடலோர பகுதியில் மழை பெய்யும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.