/indian-express-tamil/media/media_files/2025/10/15/minister-chakrabarni-2025-10-15-19-51-38.jpg)
வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாத ரேஷன் அரிசியை இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி
வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்துக்குரிய அரிசியை இந்த அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை (Priority) மற்றும் முன்னுரிமையற்ற (Non-Priority) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகமாகப் பெய்யக்கூடும் என்பதால், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் ஒரு சிறப்புச் சலுகை அறிவிக்கப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும், இந்த அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 கிலோ முதல் 35 கிலோ வரையிலான அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும், அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீடான 12 கிலோ முதல் 35 கிலோ வரையிலான அரிசியை இம்மாதத்திலேயே முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு: நவம்பர் மாதத்திற்கான அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்திலும் தங்களுக்குரிய அரிசியை பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சிறப்பு வசதியை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.