சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும், உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மதுரையில் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில் இன்று ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 2 அறிவிப்புகளை வெளியிட்டு ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;
”உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவமைத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். அவரது நினைவு நாளான மார்ச் 14 ஆம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ். சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
2வது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103 ஆவது பிறந்த நாள். மதுரை உசுலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசுலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர். அவருக்கு உசுலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார். 1952-ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் மூக்கையா தேவர். முத்துராமலிங்க தேவருக்கு உடன் பிறந்த சகோதரராக ஆதரவாக இருந்த மூக்கையா தேவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.