சென்னையில் பிரசவத்தின்பொது உயிரிழந்த பெண் குழந்தையின் உடலைக் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பிணவறையில் இருந்து அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மசூத், இவருடைய மனைவி சவுமியா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த நிலையில், இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சென்னை மழை வெள்ளத்தில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் மனைவி சவுமியாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் மசூத் தவித்தார். இதையடுத்து, சவுமியாவுக்கு வீட்டிலேயே பிரசவமாகி பெண் குழந்தை பிறந்தது. ஆனால், தாயையும் சேயையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு மசூத் போன் செய்தும் எந்த பதிலும் வராததால் வேறு வழியின்றி சவுமியாவையும் பிறந்த குழந்தையையும் மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என தெரிவித்தனர். உடனடியாக புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, படகை வரவழைத்து தாய், சேய் இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், 5 நாட்களாகியும் குழந்தையின் உடலை கொடுக்காமல் மருத்துவமனையில் அலைக்கழித்ததாக மசூத் வேதனை தெரிவித்தார். மேலும், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க ரூ 2500 லஞ்சம் கேட்டதாகவும் மசூத் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் புளியந்தோப்பு காவல் நிலைய காவலர்கள் மூலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல் தந்தை மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இறந்த குழந்தையை துணியால் சுற்றிக் கொடுக்காமல் அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கீழ்ப்பாக்கம் பிணவறையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர் பன்னீர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் மெமோ கொடுப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி தெரிவித்தார். அது போல் குழந்தையின் உடலை வழங்க லஞ்சம் ஏதும் கேட்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் சங்குமணி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“