சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாம் சரவணனை ஆந்திரா எல்லை அருகே போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர். சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பழி வாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழியாக கொலையாளிகளை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக உளவுத்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர்.
பாம் சரவணனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதையடுத்து பாம் சரவணனை காலில் சுட்டு போலீஸ் பிடித்த நிலையில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் எஸ்ஐ ஒருவர் காயமடைந்தாக கூறப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் துறையின் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கேயே வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏ ப்ளஸ் ரவுடி பட்டியலில் இருக்கும் பாம் சரவணன் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாம் சரவணன் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்ததாகவும் தென்னரசு கொலைக்கு பழி வாங்கும் விதமாக ஆற்காடு சுரேஷை பாம் சரவணன் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க ஆற்காடு சுரேஷ் தரப்பினரை கொலை செய்ய பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த போலீசார் ஆந்திரா அருகே தலைமறைவாக இருந்த தகவலையடுத்து தற்போது பாம் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.