/indian-express-tamil/media/media_files/2025/10/15/durai-vaiko-2025-10-15-12-47-55.jpg)
திருவெறும்பூர் தொகுதியில் பெல் நிறுவன தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், என்.ஐ.டி , ஐ .ஐ.எம் , உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களும், எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் , பள்ளி கல்லூரி நிறுவனங்கள், வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களான திரு எறும்பீஸ்வரர் ஆலயம், திருநெடுங்களநாதர் ஆலயம் ஆகியவை உள்ளன. சுற்றுலா தளமான கல்லணையும் திருவெறும்பூர் அருகாமையில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க திருவெறும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் குறைந்த தூரங்களுக்கு இயக்கப்படும் "பயணிகள் ரயில்" மட்டும் நின்று சென்றது.
விரைவு ரயில்களான மைசூர் எக்ஸ்பிரஸ் தவிர எதுவும் நின்று செல்லாது. இந்நிலையில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கை குறித்து திருச்சி எம்.பி. துரை வைகோவிடம் தொகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக துரை வைகோ நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக திருச்சி-தாம்பரம் விரைவு ரயில், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் என்ற அறிவிப்பு ஆணை நேற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 5:50-க்கு வந்து நின்ற ரயிலை துரை வைகோ எம்.பி, ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் துரை வைகோ எம்.பி, ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அவரும், அவருடன் ம.தி.மு.க நிர்வாகிகளும் தஞ்சாவூர் வரை ரயிலில் பயணம் செய்தனர். மேலும், ரயில் பயணிகளிடம் துரை வைகோ நிறை, குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இது குறித்து எம்.பி துரை வைகோ செய்தியாளர்களிடத்தில் கூறுகையில்:- திருவெறும்பூர் தொகுதி மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை முதல் கட்டமாக நிறைவேற்றியுள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று இயங்கும் திருச்சி -தாம்பரம் ரயில் வாரத்தில் திங்கள், வியாழன் கிழமைகளை தவிர மீதி 5 நாட்களும் இயங்கும். இது தற்பொழுது தீபாவளி சிறப்பு ரயிலாக இருந்தாலும், இதை தொடர்ந்து இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்து இந்த ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் திருச்சி- சென்னை சோழன் விரைவு ரயில், சென்னை -ராமேஸ்வரம் விரைவு ரயில், கோவை -மாயவரம் விரைவு ரயில் என அனைத்தும் நின்று செல்லவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் ரொக்கையா, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் டி டி சி சேரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமாவளவன், தெற்கு ஒன்றிய செயலாளர் பீட்டர், துவாக்குடி நகரச் செயலாளர் மோகன், பெரிய கருப்பன், திருவெறும்பூர் பகுதி செயலாளர் சோமு, எல்லக்குடி அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோழிக்கடை துரை, 41-வது வட்டச் செயலாளர் மாரியப்பன், சமூக ஆர்வலர்கள் பேராசிரியர் நெப்போலியன், வினோத் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.