/indian-express-tamil/media/media_files/2025/10/27/kanimozhi-2025-10-27-12-05-28.jpg)
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார். தி.மு.க மாநில உணவு ஆணை தலைவர் சுரேஷ் ராஜன் வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசியதாவது, “வரும் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கழகத்திற்கும் நமது கூட்டணிக்கும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். நமது இயக்கத்துக்கு எந்த ஒரு இயக்கத்தின் மீதும் அல்லது கட்சியின் மீதும் தனிப்பட்ட பகையோ, வெறுப்போ கிடையாது. ஆனால், நமது சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் நமது கழகம் செயல்படுகிறது.
நமது உரிமைக்காக போராடி, சுயமரியாதையை நிலைநாட்டவே தி.மு.க செயல்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது அதன் வடிவில் நீட் தேர்வு வந்து ஏழை மாணவர்களின் கனவுகளை நசுக்கி வருகிறது. கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை தமிழ்நாடு செய்துள்ளது. கல்வியின் தரம் உயர்ந்துள்ளது, இதனை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் கலைஞர் பல்வேறு கல்லூரிகளை உருவாக்கி, அப்போதே கல்வியின் தரத்தை உயர்த்த வித்திட்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/27/kani-1-2025-10-27-12-07-12.jpg)
மக்கள் நலத் திட்டங்களை திறன்பட செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தமிழகம் இன்றும் சிறந்து விளங்கி வருகிறது. பேரிடர் நிவாரணத் தொகை, கல்வித்தொகை உள்ளிட்ட தமிழகத்திற்கு வர வேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு வழங்காமல், தமிழக அரசை வஞ்சித்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் சமமான ஆட்சி. நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமியை காணவில்லை. தற்போது முதலமைச்சரை இன்று கேள்வி கேட்பது ஏன்?. பா.ஜ.க விடுக்கும் கட்டளைகளை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார்.
பா.ஜ.க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா அல்லது தேர்தல் ஆணையத்தின் மூலம் ஆட்சி அமைத்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். தேர்தல் முடிந்த ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கூட, தேர்தல் குளறுபடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இன்று நாம் சந்திக்கக்கூடிய தேர்தல் களம், சூழ்ச்சி நிறைந்த களம். வாக்காளர் பட்டியல்களை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். புதிதாக சேர்க்கும் பட்டியல் நியாயமானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினரின் சுயமரியாதை நிலைநாட்ட தி.மு.க. மீண்டும் வெற்றி பெற செய்திட வேண்டும்” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது:- மீண்டும் மீண்டும் மொழி திணிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும், முனைப்பு காட்டி வருகின்றனர். இது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதாக இருக்காது. இது நாட்டிற்கு எதிரான செயல். கற்காலத்தில் இருந்து மக்கள் எந்த மொழி பயன்படுத்துகிறார்கள். மக்களின் மனம் புண்படாத வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மத்திய குழு வந்து ஆய்வு செய்துள்ளது. அவர்களிடம் நெல் கொள்முதலுக்கான ஈரத்தன்மை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் நிலைகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதில் சில திரைப்படங்களும் உதவுகின்றன. அவற்றின் மூலம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
தமிழகத்தில் மக்கள் வளர்ச்சிக்கான சிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அவரவர் கட்சி அவர்களுக்கான சித்தாந்தம் அடிப்படையில் நடத்துகிறார்கள். தி.மு.க-வின் சித்தாந்தம் சமூகநீதி, வேற்றுமையை களைவது, மக்களின் உரிமை மற்றும் வளர்ச்சி ஆகும் என்று பதிலளித்தார். இந்த கூட்டத்தில், நாகர்கோவில் மாநகரச் செயலாளர் ஆனந்த், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் தாமரை பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலிலா ஆல்பன், மகளிர் தொண்டர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாநில, மாவட்ட உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us