கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி விலைமாதர்கள் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதற்கு மக்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மூத்த அரசியல்வாதியாகவும் திமுகவின் முக்கிய தலைவராகவும் மற்றும் அமைச்சராகவும் உள்ள பொன்முடி பெண்களையும் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பதாகவும் தான் ஒரு அமைச்சர் என்ற பொறுப்பில்லாமல் பேசியிருப்பதாகவும் அமைச்சர் பதவிக்கு பொன்முடிக்கு தகுதி இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
திமுகவிலேயே இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.