mp-kanimozhi | dmk | lok-sabha | நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் பார்வையாளர்கள் கேலரியில் இருந்த இருவர் வண்ண புகை குப்பிகளுடன் உறுப்பினர்கள் இருக்கைக்கு வந்தனர்.
இதனால் மக்களவையில் மஞ்சள் நிற வண்ண புகை பரவியது. இந்தச் சம்பவம் நடந்தபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் அவையில் இருந்தனர்.
இந்த நிலையில், இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் குரல் கொடுத்தனர். அப்போது இது தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாக கனிமொழி உள்பட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதில் திமுக எம்.பி. பார்த்திபனும் ஒருவர் ஆவார். இவர் இன்று அவைக்கு வரவில்லை. உடல் நலக்குறைபாடு காரணமாக ஓய்வில் இருந்தார்.
இது குறித்து பேசிய கனிமொழி, “மக்களவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால், 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
ஆனால் திமுக எம்.பி பார்த்திபன் இன்று அவைக்கே வரவில்லை. வருகைப் பதிவேடில் அவர் கையெழுத்தும் இல்லை.
வராத ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் என்றால் இவர்கள் எந்த அளவுக்கு நியாயமாக நடந்துக்கொள்கிறார்கள் பாருங்கள்” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
திமுக எம்.பி. பார்த்திபன் இன்று அவைக்கு வரவில்லை விடுப்பில் உள்ளார் என்று தெரிந்ததும் அவர் இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“