மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி அலைந்த தமிழக எம்.பி-க்கள்
பாஜகவினர் மதுரை மக்களுக்கு மல்லிகை பூ சுற்றுகின்றனர். அண்ணாமலை முழு பூசணிக்காயை சோற்றில் மறைகிறார்- எம்.பி. வெங்கடேசன் மற்றும் எம்.பி. மாணிக்கம் தாகூர்
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான பரப்புரையை பாஜக தலைவர் நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினர்.
Advertisment
இதுகுறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா முழு பூசணிக்காய் மறைக்கும் வேலையாய், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை 95 சதவீத முடிந்துள்ளதாக கூறினார்.
வடிவேல் கிணறை காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% கட்டிடத்தை காணவில்லை. அதை தேடி கண்டுபிடிக்க வந்தோம்.
தமிழக மக்களை தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது. எய்ம்ஸ் பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவல் பரப்புகிறது.
23 எய்மஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு செய்து நிதி பெற்று நடத்துகிறது. மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. அதிலும் பாதி நிதி ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது. பாஜகவினர் மதுரை மக்களுக்கு மல்லிகை பூ சுற்றுகின்றனர். அண்ணாமலை முழு பூசணிக்காயை சோற்றில் மறைகிறார்.
90 % வேலை ஜப்பான் செய்கிறது. இதில் மத்திய அரசு செய்ய வேண்டிய வேலை, மாநில அரசு இடத்தை ஒதுக்கி தருவது மட்டுமே.
இதே போல் மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனக் கூறுவது மதுரை மக்களை ஏமாற்றுகின்ற செயல் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“