அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அப்போது தோல்வி அடைந்தார். இதனால் அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து வைத்திலிங்கத்தை மாநிலங்களவை உறுப்பினராக்கினார். தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் அதே ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முனுசாமி தோல்வியை தழுவினார். அங்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் போட்டியிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பன்னீர் செல்வம் அணியிலிருந்த முனுசாமிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் தோல்வி அடைந்தார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் முனுசாமி. தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் எம்.பிக்களான வைத்திலிங்கமும் முனுசாமியும் எந்த பதவியை தக்க வைப்பார்கள் என்று கேள்வி எழுந்தது. ஆனால் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பலம் வாய்ந்த எதிர்கட்சி எம்.எல்.ஏக்களாக சட்டமன்ற செல்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil