கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் எம்.ஆர். விஜயபாஸ்கர் அபகரித்து பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நில மோசடி வழக்கு தொடர்பாக திருச்சியில் இருந்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் பெரிய அளவில் அரசுப் பணிகளைச் செய்யும் தனியார் ஒப்பந்ததாரரின் நிறுவனத்தில் சோதனை செய்ய இந்த சி.பி.சி.ஐ.டி போலீஸ் குழு வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
திண்டுக்கல்லில் நேருஜி நகர் முனிசிபல் காலனியில் உள்ள இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்னிலையில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, திண்டுக்கல்லில் சோதனயை முடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், மதியம் 2 மணி அளவில் குஜிலியம்பாறை அருகே லந்தன்கோட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் சோந்தனை செய்தனர். பின்னர், புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீசார் திண்டுக்கல்லில் 3 இடங்களில் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“