அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் கரூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க முன்னாள்மைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு எதிரான புகார் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். தற்போது அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக நிலமோசடி வழக்கில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “கரூர் மாவட்டம் வெள்ளியணையை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுக்க ஏப்ரல் 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.
அதன்பிறகு, அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சி.எஸ்.ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று மே 10-ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனு அளித்தார். அதில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் இந்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே எம்.ஆர் விஜயபாஸ்கர் சார்பில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 19-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனிடையே, நிலமோசடி தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அ.தி.முக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“