தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தண்டையார்பேட்டையில் தாயுமானவர் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கடவாச்சேரி பகுதியில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கிவைத்து, மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டம், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று குறைகளை கேட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற இயலாதவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்படுவதை களைவதற்காகவும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி" குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற சிறப்புத் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட கடவாச்சேரி, உசுப்பூர், தேவதாஸ் நகர், கீரப்பாளையம் மற்றும் கடலூர் வட்டத்திற்குட்பட்ட சொத்திகுப்பம் ஆகிய பகுதிகளில் குடிமைப் பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடிப்படையில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை. கோதுமை, துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யப்படவுள்ளது.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
இத்திட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்டத்தில் 1460 நியாயவிலைக்கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 44,312 குடும்ப அட்டைகளில் உள்ள 60,069 பயனாளர்களும், 5,051 குடும்ப அட்டைகளில் உள்ள 5,051 மாற்றுத்திறனாளிகளும் ஆக மொத்தம் 49,363 குடும்ப அட்டைகளில் உள்ள 65,120 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி விநியோகம் செய்ய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் சேர்ந்து குழு உருவாக்கப்பட்டு, பொருட்கள் மூடிய வாகனங்களில் குடிமைப்பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளிகளின் இல்லத்திற்கு சென்று, நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 70 வயதிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று குடிமைப்பொருள்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாத முதியவர்களுக்கு கண் கருவிழியினை ஸ்கேன் செய்யும் முறையிலும் குடிமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது” என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்