Advertisment

மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு- பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.

author-image
WebDesk
New Update
MS Swaminathan passed away

MS Swaminathan, the father of India's Green Revolution

உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனப்படும் எம்எஸ் சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வந்தார்.

98 வயதாகும் நிலையில் இன்று காலை எம்எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக  காலமானார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது மீனா சுவாமிநாதன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.

எம்எஸ் சுவாமிநாதன்- மீனா தம்பதியினருக்கு சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யாராவ் ஆகிய 3 மகள்கள், 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். எம்எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MS Swaminathan

எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த குறித்த முக்கிய தகவல்கள்:

கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.

1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை கோதுமைப் புரட்சிஎன்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவுஎன்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார்.

MS Swaminathan

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோவிருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

வேளாண் விஞ்ஞானி எம்எஸ்.சுவாமிநாதன் மறைவு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் நம்மிடம் தெரிவிக்கையில்; அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. இவரது உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்திட வேண்டும்.

இந்திய விவசாயிகளின் விடிவெள்ளி, பசுமை புரட்சியின் நாயகர், பசியின்மையை அகற்ற உணவு உற்பத்தியை பெருக்க பசுமை புரட்சி என்கிற வேளாண் புரட்சியை உருவாக்கியவர். 30 கோடி மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் தகுதி இல்லாத நிலையில் இன்றைக்கு 140 கோடி மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொலைநோக்கு திட்டமிட்டு உணவு உற்பத்தியில் இந்தியாவில் தன்னிறைவை ஏற்படுத்தி வெற்றி கண்டவர்.

விவசாயிகள் மேம்பாட்டிற்காகவும், உற்பத்தி செய்யும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கும், உரிய சந்தை, கடன் வசதி, ஏற்றுமதி இறக்குமதி கொள்கையை உருவாக்குவதற்கும் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட தனது தலைமையிலான எம்.எஸ் சுவாமிநாதன் குழு அறிக்கையை தொலைநோக்கு பார்வையோடு தயாரித்து அளித்தவர். அவருக்கு நிகர் அவரே என்று செயல்பட்டு வந்தவர்.

உலகமே வியந்து பார்க்கிற வகையில் வேளாண் நலன் காக்கும் அறிக்கையை தாக்கல் செய்தவர்.

மதிப்பிற்குரிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும். உலக அளவிலான வேளாண் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் துயரமாகும்.

அவரை இழந்து வாடுகிற குடும்பத்தார்கள், நன்பர்கள் வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகள் அனைவருக்கும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு அவரது சிறந்த செயல்பாட்டுக்கு மதிப்பளித்து அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசு மரியாதை அளித்து இறுதி சடங்குகள் நடத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.

மேற்கண்டவாறு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment