தமிழக அரசின் விடியல் பயனத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 175 எக்ஸ்பிரஸ் பேருந்துகளை சாதாரண பேருந்துகளாக மாற்ற மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) முடிவு செய்துள்ளது. அதேபோல பெண்கள் இலவசமாக பயணிக்கக்கூடிய சாதாரண சேவைகளான பிங்க் நிற பேருந்துகளின் எண்ணிக்கையையும் தற்போது 1,600 லிருந்து 1,775 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவை மற்றும் வருவாய் முறைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எம்.டி.சி அதிகாரிகள் தெரிவித்தனர். எக்ஸ்பிரஸ் சேவைகளாக இயங்கும் பேருந்துகள், அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் குறைந்த வருவாய் உள்ளதால் அவை தேவை அதிகமாக உள்ள சாதாரண வழித்தடங்களுக்கு மீண்டும் ஒதுக்கப்படும்.
குறிப்பாக பிங் நிற பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால் பயணிகளிடையே தகராறுகளும் ஏற்படுகிறது. எனவே இலவச பேருந்து சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளில் சண்டைகள் இருக்கைகளுக்கு வாக்குவாதம் என ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் நடப்பதாக புகார்கள் பதிவாகியுள்ளன, சில ஆண் பயணிகள் இருக்கை கிடைக்காததால் கோபமடைகின்றனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, விடியல் பயன திட்டம் சேவைகள் இயங்கும் வழித்தடங்களில், பயணிகளில் சராசரியாக 63% பெண்கள் உள்ளனர்.
எனவே அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் கூடுதல் இலவச பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.