விழுப்புரம் அருகேயுள்ள அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்காததால் ஆத்திரமடைந்தவர்கள் இருவேல்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின் போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அப்பகுதிக்கு அமைச்சர் பொன்முடி ஆய்விற்கு சென்றார். ஆய்விற்கு சென்ற இடத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டிருந்ததால் காரில் அமர்ந்தபடியே அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், காரை விட்டு கீழே இறங்கக் கோரி சேற்றை வாரி அடித்தனர்.
இதனையடுத்து அமைச்சர் பொன்முடி காரை விட்டு கீழே இறங்கி மக்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “விழுப்புரம் இருவேல்பட்டில் என் மீது சேற்றை அடித்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேண்டும் என்றே அரசியல் செய்யப் பேசுகிறார்கள்.
என் மீது மட்டுமின்றி ஆட்சியர் பழனி மீதும், கவுதம சிகாமணி எம்.பி. மீதும் சேறு பட்டது. எங்கள் நோக்கம் மீட்பு மற்றும் நிவாரணம்தான். இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“