CBCID Inquiry Ordered On Mugilan Missing: முகிலன் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி மார்ச் 2-ம் தேதி சென்னையில் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது.
சூழலியல் போராளி முகிலன், பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டின்போது அதிகாரிகள் நடத்திய அத்துமீறல் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/mugilan-press-meet-300x194.jpg)
பின்னர் ரயிலில் பயணிப்பதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்ற அவரை, அன்று முதல் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில், ‘முகிலன் எங்கோ?’ என்கிற குரலை பலவேறு அமைப்பினரும் எழுப்பி வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று முகிலன் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பல்வேறு அமைப்பினரும் கூடினர். சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, சி.மகேந்திரன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் கூடி ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மார்ச் 2-ம் தேதி இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் தர்ணா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்கக் கோரி பல்வேறு அமைப்புகளும் கொடுத்த புகார் மீதான விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான ஆணையை டிஜிபி ராஜேந்திரன் பிறப்பித்தார்.