முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய, கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் எதிர்ப்பை கடிதம் மூலமாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, புதிய அணை கட்ட அனுமதி கோரும் கேரளாவின் கோரிக்கையை வருங்காலங்களில் பரிசீலனைக்கு ஏற்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் தேக்கடியில் 123 ஆண்டுகால முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் ஒப்புதலோடு தான் புதிய அணை எதையும் கட்ட முடியும். சமீபத்திய கேரள வெள்ளத்திற்கு பிறகு, புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, கேரளாவின் பீர்மேடு தாலுகா மஞ்சுமலையில் இடமும் பார்க்கப்பட்டுள்ளன. 170 அடி உயரத்தில், 663 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கும் இப்புதிய அணை, தற்போதைய முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1200 அடி கீழ்திசையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான், இந்த புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய, ஏழு நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி சமர்ப்பிக்கப்படும் ஆய்வறிக்கையில் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டுமென்று நிபந்தனை விதித்துள்ளது. 2014 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் ஒப்புதலை பெற்ற பிறகே, எந்த ஆய்வையும் கேரள அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் எப்படி அனுமதி வழங்கியது? என தமிழக கட்சிகள் கொந்தளித்துள்ளன.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு, ஆகஸ்ட் 2014ல் இதே போன்றதொரு கோரிக்கையை கேரள அரசு முன்வைத்து மத்திய அரசின் அனுமதியையும் பெற்றது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக செயல்பட்டதால், தேசிய வனத்துறை வாரிய நிலைக்குழுவின் உறுப்பினர் செயலர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு எதிராக மே 15, 2015 அன்று தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. ஜூன் 10ம் தேதியிட்ட கடிதத்திலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இது குறித்து தங்களுக்கு விரிவாக விளக்கியிருந்தார். மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்து, வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படக்கூடாது என்றும் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழங்கிய அனுமதி ஜூலை 2015ல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் அதே போன்றதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, கேரள அரசு ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்காதவாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்!” என்று கோரியுள்ளார்.
சபரிமலை விவகாரம் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில், அடுத்த வெடிகுண்டாக முல்லைப் பெரியாறு விவகாரம் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.