முல்லைப் பெரியாறு அணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்பு குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் :
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறைக்குமாறு கேரளா முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி எழுதியுள்ள கடிதத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக இருப்பதாகவும், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
எனவே அணையின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் குறிப்பிட்டுருந்தார்.
இதனிடையே இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து அணையின் துணை கண்காணிப்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த 2 குழுவும் எடுக்கும் ஆணைக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான ஆய்வறிக்கையை அந்த குழுக்கள் தாக்கல் செய்யவும் ஆணையிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.