கேரள திரைப்பட தயாரிப்பாளர் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சை வீடியோவை வெளியிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக தமிழகம் - கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கருந்துவேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. அணை பலமாக இருப்பதாக பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று அறிக்கை அளித்தபின், நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 14அடி வரை நீர் தேக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்த சூழலில், இரண்டு வாரங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், முல்லை பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகவும் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணையின் நீர்மட்டம் 142 அடியைக் கடந்தபோது கேரளாவில் அப்போது பெய்த மழையால் உயிர் சேதம் ஏற்பட்டதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 24-ல் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், கேராளாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் எடிட்டருமான பிரதீப் எமிலி
‘முல்லைப் பெரியாறு ஒரு முன் கருதல்’ என்ற தலைப்பில் 6.11 நிமிட நேரம் கொண்ட 3டி அனிமேஷன் யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமையான முல்லை பெரியாறு அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்து பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கலாம். எனவே, தற்போது உள்ள அணையில் இருந்து சற்று தள்ளி புதிய வளவு அணை கட்டி இந்த இரண்டு அணைகளுக்கும் மண் அல்லது கான்கிரீட்டால் நிரப்பி பலப்படுத்த வேண்டும். இந்த அணையின் மேல்பகுதி வழியாக வல்லக்கடவு, கெவி சுற்றுலாத் தலங்களுக்கு, சுற்றுலாப் பயணியரை அழைத்துச் செல்வதால், கேரள சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். எனவே, மக்கள் இந்த கோரிக்கையை முன்னிலைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, அணை வலுவாக உள்ளது என தெரிவித்தபின்னர்தான், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கேரள திரைப்பட தயாரிப்பாளரும் எடிட்டருமான பிரதீப் எமிலி முல்லைப் பெரியாறு அணை குறித்து வெளியிட்டுள்ள 3டி அனிமேஷன் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த தமிழக விவசாயிகள் கேரளாவில் இது போன்ற வீணான வதந்திகளை பரப்பிவருகின்றனர் என்று கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.