Mullaiperiyar Dam Crisis : இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகின்ற காலகட்டத்தில், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு நிலை மழைக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தியது. தமிழக, கேரள எல்லையோர மலை மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டது. கேரளாவில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்க அளவு குறித்து பல்வேறு கவலைகளை அம்மாநில அரசு எழுப்பியது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த கடிதத்தில் இரு மாநில நன்மைகளையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து கவலைகளை வெளிப்படுத்திய பினராயி விஜயனின் வேண்டுகோள்களுக்கு இணங்கள் நொடிக்கு 2300 கனஅடி நீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
“உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய நீர் ஆணையம் வரையறை செய்துள்ள அளவே அணையில் நீர்மட்டம் உள்ளது” என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்ட முதல்வர் ”அணையின் நீர்மட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். புதன்கிழமை இரவு (27/10/2021) 9 மணி நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.9 அடியாக உள்ளது. நீர் வரத்து 2300 கனஅடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil