Mullaiperiyar dam safety issue : 11ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்களை கண்டறிந்து எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டத்து உச்ச நீதிமன்றம். மேலும், பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்ய தமிழகம், கேரளம், மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நீர்வள ஆணையம் தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் கேரளா- தமிழகம் இடையிலான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனு ஆகியற்றை இணைத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணையின் கண்காணிப்பு குழுவின் நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த 2010ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் நீரியல் ரீதியாகவும் நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 14 முறை முறை நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பது குறித்து பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனாலும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற பிப்ரவரி 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil