முல்லைப் பெரியாறில் கேரளா ஏமாற்றுகிறது : பொறியாளர் வீரப்பன்

முல்லைப் பெரியாறில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக கேரளா தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதாக சொல்கிறார், பொறியாளர் வீரப்பன்.

முல்லைப் பெரியாறில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக கேரளா தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதாக சொல்கிறார், பொறியாளர் வீரப்பன்.

‘முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு கிடையாது. அது கேரளாவின் இறையாண்மை உரிமைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு வருகிறவர்களை கட்டுப்படுத்தும் உரிமை கேரளாவுக்கு இருக்கிறது!’ என உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து ‘ஐஇ தமிழ்’க்காக, தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் முதன்மைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் கருத்து கேட்டோம். முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் குத்தகைக்கு பெற்றிருப்பதுபோல ஒரு கருத்தை கேரளா தொடர்ந்து கூறுகிறது. அதுவே தவறு! 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் பிரிட்டீஷ் அரசுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்த நகல் என்னிடம் இருக்கிறது. அதில், அந்தப் பகுதியின் உரிமை 999 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு ‘மாற்றம்’ செய்யப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு இடத்தில் அல்ல; 4 அல்லது 5 இடங்களில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே சட்டப்படி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க அனைத்து உரிமைகளும் தமிழகத்திற்கு உண்டு. அங்கு தேவையான கட்டுமானப் பணிகளை தமிழகம் செய்யலாம். தமிழக அதிகாரிகளும், மக்களும் அங்கு செல்ல முடியும். அங்கு ஒரு சோதனைச்சாவடி வைக்கும் உரிமைகூட கேரளாவுக்கு கிடையாது.

அந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்த்துவதை தடுக்கவே இதுபோன்ற பொய்களை அபிடவிட்களாக கேரளா தாக்கல் செய்து கொண்டிருக்கிறது. தமிழகம் இதற்கு பலியாகாமல், உரிய ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் வலுவாக முறையிட வேண்டும்’ என்றார் அ.வீரப்பன்.

மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளின் பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் முல்லைப் பெரியாறுதான் உயிர்நாடியாக விளங்குகிறது. எனவே தமிழக அரசு இதில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எதிர்பார்ப்பு!

×Close
×Close