கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு பொதுப்பணித்துறையில் இருந்து தடையின்மை சான்று வழங்குவதில் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை (அக்.9) நாகர்கோவில் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் அறையில் பேரூராட்சி தலைவர்கள்(பெண்கள் உள்பட) தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
பேரூராட்சி பகுதிகளில் நீர்நிலை தடங்களில் சாலை அமைத்தல் குளங்களின் கறைகளை சீர் செய்வது போன்ற பல்வேறு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியிலிருந்து மராமத்து பணிகளை செய்ய பொதுப்பணி துறையினரின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்திற்கு 40க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் செயற் பொறியாளர் ஜோதி பாஸிடம் இது குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
தொடர்ந்து, செயற்பொறியாளரின் அறையில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை தான் மேற்கொள்ள செயற்பொறியாளர் கூறியதால் பேரூராட்சி தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“