தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வருவாய் ஈட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. கோவை மாவட்டம் மொத்தம் 4,723 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் நகரப்பகுதி மட்டும் 1,519 சதுர கி.மீட்டரை உள்ளடக்கி அமைந்துள்ளது.
மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், நகரை ஒட்டிய மற்றும் மாநகர எல்லைக்குள் வர உகந்த பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகளுடன் 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. கோவையைப் பொறுத்தவரை மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன், கிராம ஊராட்சிகள் இணைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய 4 பேரூராட்சிகள் மற்றும் குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் உள்ளிட்ட 11 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின் மூலம் 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி, 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“