திமுக மீது பா.ஜ. தொடுத்துள்ள பஞ்சமி நிலம் விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுகவின அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிகையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சீனிவாசன், சென்னை கோடம்பாக்கம் பகுதியில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் தான் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடா்ந்து மனுதாரர், தலைமைச் செயலாளா் சண்முகத்தையும், முரசொலி நிா்வாக இயக்குநா் உதயநிதி ஸ்டாலினையும் ஆணையத்தின் முன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை, சாஸ்திரிபவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் துணைத் தலைவா் எல்.முருகன் முன் அரசு தலைமைச் செயலாளா் க.சண்முகம், உதயநிதி ஸ்டாலினுக்குப் பதிலாக முரசொலி நிா்வாக அறங்காவலா் ஆா்.எஸ்.பாரதி மற்றும் திமுக வழக்கறிஞர்கள், புகாா் மனு அளித்த சீனிவாசன் ஆகியோா் ஆஜராயினர்.
அரசு மற்றும் பா.ஜ, கால அவகாசம் : ஆர்.எஸ் பாரதி கூறியதாவது, முரசொலி நிலம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று தகுந்த ஆதாரங்களுடன் ஆணையத்தின் முன் ஆஜரானோம். ஆனால், புகாா் கொடுத்த பாஜகவைச் சோ்ந்த சீனிவாசன் மேலும் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளாா். தலைமைச் செயலாளரும் கால அவகாசம் கேட்டுள்ளாா். பஞ்சமி நிலமா, இல்லையா என்பதை அறிய அரசுக்கு ஒரு மணி நேரமே போதும். அடுத்த முறை விசாரணைக்கு அழைத்தாலும் வருவோம் என்றாா். இந்த புகார், அரசியல் உள்நோக்கத்துடன் தரப்பட்டுள்ளது. புகார்தாரர் ஒன்றும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடத்தில் இல்லை என்று அவர் கூறினார்.
புகார் தொடுத்த சீனிவாசன் கூறியதாவது, அரசு சார்பில் தான் கால அவகாசம் கேட்டுள்ளது. ஆனால், ஆணையத்தின் துணைத் தலைவரோ, அரசு மற்றும் தங்கள் கட்சி கால அவகாசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த வழக்கின் விசாரணை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேதி எதையும் அவர் குறிப்பிடவில்லை என சீனிவாசன் கூறினார்.
அவதூறு வழக்கு : முரசொலி அலுவலக நில விவகார வழக்கி்ல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர, திமுக ஆலோசித்து வருவதாக ஆர்.எஸ்.பாரதி மேலும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.