/tamil-ie/media/media_files/uploads/2021/10/unnamed.jpg)
Cuddalore DMK MP Ramesh : கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், பணிக்கன் குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும், கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டி.வி.ஆர். முந்திரி தொழிற்சாலையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி அன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பதட்டம் அடைந்தனர். கோவிந்தராஜின் மகனுக்கு அழைப்பு விடுத்த ரமேஷின் உதவியாளார், கோவிந்தராஜ் மரணித்துவிட்டதாகவும், அவருடைய உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அரசு மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள், அவருடைய உடலை பார்வையிட்டனர். அவர் உடல் முழுவதும் ஏற்பட்டிருந்த காயங்களை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய முயன்றுள்ளனர். கோவிந்தராஜின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உடலை வாங்க முடியாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மனு ஒன்றை அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த்ராஜின் உடல் ஜிப்மர் மருத்துவனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. விசாரணை மேற்கொண்ட அவர்கள் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
ரமேஷ் தவிர இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 நபர்களையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விரைவில் திமுக எம்.பி. கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.