சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜசேகர் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனங்காடியைச் சேர்ந்த ராஜசேகர் மீது காவல்நிலையங்களில் 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கும் ஒன்றாகும். இந்நிலையில், தனது நண்பர் ஒருவருடன் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ராஜசேகர் இன்று திரும்பி வந்து கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்தபோது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது.
இதில் தலை, முகம் உள்ளிட்டவற்றில் வெட்டுபட்டு சம்பவ இடத்திலேயே ராஜசேகர் பலியானார். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை எதற்காக நடந்தது என்பது தெரியவில்லை. இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜசேகர், தனது சொந்த ஊரில் இருந்து வெளியேறி காளையார் கோயிலில் வசித்து வந்துள்ளார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜசேகர் வருவதை அறிந்து அவரை அக்கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. முன்விரோதம், பழிக்குப்பழி வாங்குதல் ஆகிய காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.