/indian-express-tamil/media/media_files/7baADGtvivKc21TM9QRv.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 03, 2025 12:37 IST
தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- Sep 03, 2025 12:29 IST
தவெக புதுச்சேரி பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் விவரங்களை தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர் விஜய் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 11:56 IST
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தொடரப்பட்ட நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காதது ஏன்? என்று சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டது என்றும் ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
- Sep 03, 2025 11:54 IST
புதுச்சேரி: ரூ.29,000-க்கு ஏலம் போன அரிய வகை மீன்கள்
புதுச்சேரி ஏனாமில் மீனவரின் வலையில்அரியவகை புல்சா மீன்கள் சிக்கி உள்ளன. அதிக சுவை, சத்து கொண்ட புல்சா மீன்கள், கடலில் இருந்து இனப்பெருக்கத்துக்கு ஆற்றுக்கு வரும்போது சிக்குகிறது. மீனவர் வலையில் பிடிபட்ட புல்சா மீன்கள் அதிக அளவாக ரூ.29,000க்கு ஏலம் போனது.
- Sep 03, 2025 11:37 IST
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் தவறு - டி.என்.பி.எஸ்.சி ஆலோசனை
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்துகிறது. தவறுகள் மீதான நடவடிக்கை குறித்தும், எதிர்காலத்தில் தவறை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. கேள்விகளில் தவறு ஏற்பட்டால் வழக்கமாக வழங்கப்படும் முழு மதிப்பெண்ணை இந்த முறையும் வழங்கத் திட்டம் என தகவல்கள் கூறுகின்றன.
- Sep 03, 2025 11:11 IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிராவெய்ட், புயெட்ஸ் இணையை 6-4,6-4 என பாம்ப்ரி, மைகேல் ஜோடி வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவில் இந்திய வீரரான யுகி பாம்ப்ரி, காலிறுதிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை.
- Sep 03, 2025 11:10 IST
ஆட்டோ ஓட்டுநர் ரகளை
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மதுபோதையில் அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரித்த நிலையில், 'நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்' என ஆட்டோ ஓட்டுநர் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
- Sep 03, 2025 10:26 IST
"தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்" - கமல்ஹாசன்
"ஓட்டை காணோம், வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம் என நானே சொல்லி கொண்டு இருக்கிறேன். வாக்காளர் பட்டியல் தொடர்பாக பெரிய சந்தேகம் எழுந்ததால் புகார் செய்து இருக்கிறோம். தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள், கழுதை எங்கே காணோம் என்று கவலைப்படுகிறார்களா" என்று மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 10:19 IST
பெங்களூரில் இருந்து கொக்கைன் கடத்தல் - ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு விற்பனை செய்தவர் கைது
ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பிரதீப் கூட்டாளி மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளார். கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் மேத்யூ கொக்கைனை பல பிரபலங்களுக்கு கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பெங்களூரில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து மேத்யூ விற்பனை செய்துள்ளார். மேத்யூ கொடுத்த தகவலின் பேரில் பிரபலங்கள் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 28-வது நபராக மேத்யூவை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
- Sep 03, 2025 09:33 IST
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - பொது சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா ஏ காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளுயன்சா ஏ வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்; வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
- Sep 03, 2025 09:16 IST
மீண்டும் முகக்கவசம்!
தமிழ்நாடு முழுவதும் 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
- Sep 03, 2025 09:16 IST
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 03, 2025 08:59 IST
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- Sep 03, 2025 08:49 IST
வடிகாலில் விழுந்து பெண் பலி - “இயற்கைக்கு மாறான மரணம்“
சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Sep 03, 2025 08:48 IST
நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்தது வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம். முன்னதாக இவ்வழக்கைல் ரூ.37 கோடி மதிப்புள்ள ரன்யா ராவின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன.
- Sep 03, 2025 08:46 IST
நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு
சூடானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்க ஐ.நாவின் உதவியை சூடான் நாடியது.
- Sep 03, 2025 08:07 IST
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி!
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதித்த வீரர் - வீராங்கனையர் 8 பேருக்கு 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ், தமிழ்நாடு அரசு அரசுப் பணி வழங்கியது. பணி நியமன ஆணைகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
- Sep 03, 2025 07:53 IST
தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!
திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரமாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருந்தனர்.
- Sep 03, 2025 07:51 IST
கார் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் மோதியதில் பைக்கில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன் (50), பூவேந்திரன் (70) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- Sep 03, 2025 07:50 IST
வரலாறு படைத்த ரஷீத் கான்
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்(165) வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார். முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- Sep 03, 2025 07:49 IST
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- Sep 03, 2025 07:48 IST
வெள்ளநீர் என்பது ஆசிர்வாதம் - பாக்., அமைச்சர் சர்ச்சை பேச்சு
பாகிஸ்தானில் கொட்டி தீர்த்து வரும் கனமழைக்கு 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ள நீரை ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும், வெள்ளத்தால் குறிப்பாக கிழக்கு பாகிஸ்தான் பகுதி உருகுலைந்து போயுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள நீரை சேமிக்க வேண்டும் என பாக்.பாதுகாப்பு துறை அமைச்சர் சர்ச்சை பேசியுள்ளார்.
- Sep 03, 2025 07:47 IST
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Sep 03, 2025 07:23 IST
வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் - 29 பேர் கைது
திருவள்ளூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீச்சு நடத்திய வட மாநில தொழிலாளர்கள் 110 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 29 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- Sep 03, 2025 07:21 IST
ஸ்டாலினுக்கு லண்டனில் உற்சாக வரவேற்பு
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லண்டன்வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன் என ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 03, 2025 07:20 IST
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 5.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் வந்துள்ளது.
- Sep 03, 2025 07:19 IST
கார் தீ விபத்து - பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு
சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நந்தம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தர்வர்கள் கீழே குதித்து தப்பினர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
- Sep 03, 2025 07:18 IST
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஓணம் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி நடை அடைக்கப்படும் நிலையில் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
- Sep 03, 2025 07:16 IST
ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்ய உள்ள நிலையில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குமேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.