/indian-express-tamil/media/media_files/LbXe2ZdGgz0n2lQz6XMj.jpg)
Muruga Devotees Conference Madurai June 22
மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களைப் பார்வையிடும் வகையில் திடலில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ள இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மதுரை மாநகர காவல் துறையை அணுகினர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவல் துறை 52 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஜூன் 18-க்குள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய நிபந்தனைகள்:
பாதுகாப்பு: பிற மாநிலத்தவர் உட்பட அனைவருக்கும் தனித்தனி வண்ண அனுமதிச் சீட்டுகள், வாகன நிறுத்த வசதிகள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை, சிசிடிவி கண்காணிப்பு, தன்னார்வலர்கள் மூலம் வாகன கண்காணிப்பு, மீட்பு வாகனங்கள்.
வசதிகள்: கழிப்பறைகள், மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள்.
அனுமதிகள்: மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அனுமதி, ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி.
போக்குவரத்து: ரிங் ரோட்டில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையுடன் ஒத்துழைப்பு.
பங்கேற்பு: பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் மக்களின் பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.