isaignani-ilayaraja | சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இன்றைய நாள் சரித்திரத்திலேயே முதல் முறையாக, சிறப்பான நாள். அது தமிழ்நாடு அல்ல; வட இந்தியா அல்ல; இந்தியா முழுக்கவும் அல்ல. உலகச் சரித்திரத்திலேயே முதன்மையான நாள். இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?
யாரால் முடியும்? எல்லோராலும் செய்ய முடியுமா? யாராலயும் செய்ய முடியாது. அவருக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்; யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்குப் பாருங்கள்.
இதையெல்லாம் சொல்லும்போது என் கண்ணில் நீர் வருகிறது. கண்ணில் நீர் வருகிறது. (அப்போது இளையராஜா நா தழுதழுத்த நிலையில் பேசினார்).
தொடர்ந்து, "இந்த நிகழ்ச்சியிலேயே நான் உங்கள் முன்னால் நிற்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது. இந்த நாளில் அயோத்தியில் இருக்க வேண்டிய நான்; இந்த இடத்தில் இருப்பது எனக்கு வருத்தத்தை தந்தாலும், உங்கள் முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது" என்றார்.
இதையடுத்து, "இந்தியாவில் எத்தனை கோவில்கள் உள்ளன; அந்தந்த கோவில்கள் எல்லாம் அந்த நேரத்தில் ஆண்ட மன்னர்கள் கட்டியதாக இருக்கும். இன்று இந்தியாவுக்கு என்று ஒரு கோவில் எழும்பி உள்ளது என்றால் அது இந்த கோவில் தான் என்பதை நான் சொல்ல மறந்து விட்டேன்.
பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டினார்கள். சேர நாட்டில் கோவில்கள் கட்டப்பட்டன. ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டினார். அது உலகம் முழுக்க புகழ்பெற்றது. இன்று இந்தியாவிற்கு உலகத்திற்கு ராமபிராம் பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மன்னர் செய்த வேலையை இன்று பிரதமர் செய்துள்ளார்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“