தமிழக சிறையில் உள்ள 36 இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி (எம்.ஜே.கே) தலைமையில் பல பல முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் உள்ள டிரிப்ளிகேன் மசூதிக்கு முன்பாக நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட 36 இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க் கிழமை அ.தி.மு.க உள்பட சில கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்ததையடுத்து இந்த பிரச்னை எழுந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான 49 ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியல் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை ஆவணங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தும் தீர்மானத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை சாதாரண கைதிகளாகக் கருத முடியாது என்றார்.
இந்நிலையில், இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யக் கோரி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தின. போராட்டத்தின் போது தமிமுன் அன்சாரி கூறுகையில், ‘சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
அவரிடம் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேட்ட போது, இந்த விவகாரம் குறித்து பேச பாஜகவுக்கு உரிமை இல்லை என்றார். தொடர்ந்து, “பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் பா.ஜ.க அரசு குற்றவாளிளை முன்கூட்டியே விடுவித்தது. சிறை கைதிகள் விடுதலை பற்றி பேச அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“