Advertisment

உயர பறந்த தேசிய கொடி; வியந்த போலீஸ் - சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை தேசிய கீதம் பாடி முடித்தவுடன், சில நிமிடங்களில் அந்த சாலையை விட்டு எந்த பிரச்சனையும் இன்றி கலைந்து சென்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
muslims protest against caa chennai special photo gallery

muslims protest against caa chennai special photo gallery

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள், தொடர்ந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

publive-image

அதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என வற்புறுத்த முடிவு செய்தனர்.

publive-image

அதன்படி போராட்டம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடம் இஸ்லாமிய அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த போராட்டம் குறித்து அறிந்த உயர் நீதிமன்றம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

publive-image

தடை குறித்து இஸ்லாமிய அமைப்பு தலைவர்களிடம் நேற்று இரவு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்” எனக் கூறி இன்று சென்னை வாலஜா சாலையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். உயர் நீதிமன்றம் போராட்டத்திற்குத் தடை விதித்திருந்ததால் போலீஸார் சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை இருபக்கமும் மறித்துத் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

publive-image

இந்த தடுப்புகள் அமைந்திருந்த பகுதியில் போராட்ட மேற்பார்வையாளர்கள் போல சிலர் நின்று கொண்டு போலீஸாரிடம் பேசிக் கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் யாராவது ஆவேசப்பட்டுத் தடுப்புகளை மீற நினைத்தால், இந்த மேற்பார்வையாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி, பொறுமை காக்க வேண்டும் என ஆறுதலாக சில வார்த்தைகள் பேசி அனுப்புகிறார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் முன்பே போலீஸாரிடம் இது தொடர்பாகவே பேசியுள்ளனர்.

publive-image

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இந்த போராட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என நேற்று வரை கூறப்பட்டு வந்தது.

publive-image

போராட்டம் அறிவிக்கப்பட்டபோதும், ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட்டுக் கலைந்து விடுவார்கள், இத்தோடு போராட்டம் நீர்த்துப் போகும் என அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

publive-image

இந்த சூழலில் இஸ்லாமியச் சமூகத்தினர் அரசியல் கட்சிகள் கூட்ட முடியாத கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். "இந்த போராட்டத்தை இஸ்லாமியர்களுக்காக மட்டும் நாங்கள் நடத்தவில்லை. நேரடியாக இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் இலங்கை-தமிழர் உள்பட அனைத்து மதத்தினருக்காகவும்தான் இதைச் செய்கிறோம்" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

publive-image

வழக்கமான போராட்டங்கள் போல அல்லாமல் மிக அமைதியாக இந்த போராட்டம் நடைபெற்றது.

publive-image

போராட்டத்தில் கட்சிக் கொடிகள் உயரப் பறக்கவில்லை. போராட்டக்காரர்கள் கையில் ஒன்றுபட்ட இந்தியாவின் தேசியக் கொடிகள் மட்டுமே காணப்பட்டது.

publive-image

பெண்கள் குழந்தைகள் ஒருபுறமிருக்க, ஆண்கள் ஒருபுறம் நின்றனர். மக்கள் அந்த வழியாக எளிதாக நடந்து செல்லும் வகையில் இடைவெளி விட்டு மனிதச் சங்கிலிகளும் உருவாக்கப்பட்டிருந்தது.

24 மணி நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் எனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு அரசியல் மாற்றத்தை நிகழ்த்தும் என அறிவிப்பை விடுத்து போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

publive-image

போராட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படப் போராட்டம் அரசு விழாக்களைப் போல நிறைவு பெற்றது.

publive-image

இடையில் போராட்டத்தின்போது, ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பகுதியில் வந்தது. இதைப் பார்த்த போராட்ட மேற்பார்வையாளர்கள் அதிரடிப் படை வீரர்கள் போலச் செயல்பட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி பெற்றுத் தந்தனர். அதே வேளையில், ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த போராட்டக்காரர்களும் வழியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

publive-image

தேசிய கீதம் பாடி முடித்தவுடன், சில நிமிடங்களில் அந்த சாலையை விட்டு எந்த பிரச்சினையும் இன்றி சென்றனர். இந்த கூட்டம் அங்கிருந்து சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கையில் சாக்கு மூட்டைகளுடன் அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை வாரத் தொடங்கினர்.

publive-image

போராட்டக்காரர்களின் அணுகுமுறையை பார்த்துக் கொண்டிருந்த போலீஸார், "போராட்டம்-னா இப்படி இருக்கணும்" எனும் ரீதியில் முணுமுணுத்ததை கேட்க முடிந்தது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment