/indian-express-tamil/media/media_files/2025/11/04/dmk-booth-agents-meeting-2025-11-04-08-26-46.jpg)
அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும்: தி.மு.க.வினருக்கு அமைச்சர் கே.என் நேரு அறிவுரை
திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பி.டி.ஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி மண்டலப் பொறுப்பாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
வாக்காளர் பட்டியலை நாம் சரியாகச் சரிசெய்துவிட்டாலே, நமக்கு பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும். தி.மு.க கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்று விடுவார்கள் என அ.தி.மு.க. பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், நமது கூட்டணியில் இருந்து இதுவரை ஒருவர்கூட வெளியே செல்லவில்லை. ஆனால், அவருடன் (பழனிசாமி) இருந்தவர்களில் பா.ம.க இரண்டாகப் பிரிந்துவிட்டது. தே.மு.தி.க. வெளியேறிவிட்டது. சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ், செங்கோட்டையன் எனப் பல பிரிவுகளாகப் பிரிந்து, அ.தி.மு.க.தான் செதில் செதிலாகச் சிதறிக் கிடக்கிறது. நாம் அப்படியே தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.
மீண்டும் 2-வது முறையாக மு.க. ஸ்டாலினை முதல்வராக்கி, ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதுதான் நமது கடமை. இது அவருக்காக அல்ல, பொதுமக்களின் நன்மைக்காகத்தான். தி.மு.க.வில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறிவைத்து அடிப்பதற்கு பா.ஜ.க தயாராகிவிட்டது. அதற்கு முதல்பலி நானாகி விட்டேன். எது வந்தாலும் உறுதியாக நிற்போம், அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர, விட்டுவிட்டு போகக் கூடாது. இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு பேசினார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியில் நடைபெற்ற மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி முகவர்கள் கூட்டத்திலும், நாகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us