சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற சூழலில், மத்திய மண்டலத்தில் அடர்த்தியாக உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மதுரையில் நடத்தும் வலையர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல சமூகங்களும் மாநாடுகளை நடத்தி தேர்தலில் பெரிய கட்சிகளிடம் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
வருகிற சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இருபெரும் துருவ தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டும் பேரும் இல்லாமல் நடைபெறுகிறது. எல்லா தேர்தலின்போதும் பெரிய மற்றும் சிறிய சமூகங்களின் சங்கங்கள் அமைப்புகள், சிறிய கட்சிகளின் ஆதரவை திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் பெற்றுவிடும். அவர்களுக்கான அங்கீகாரத்தை ஏதாவது ஒரு சீட்டு கொடுத்து சரி கட்டுவார்கள். பெரிய கட்சிகளுக்கும் தேர்தலில் வெற்றி பெற இவர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அப்படி திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் அடர்த்தியாகவும் சில பகுதிகளில் பரவலாகவும் வசிக்கும் முத்தரையர்கள் தங்களது சமூக தலைவர் அடையாளமாக சுதந்திரப் போர் வீரர் பெரும்பிடுகு முத்ரையரை கொண்டாடுகின்றனர். முத்தரையர்கள் தங்களை முத்துராஜ் என்றும் வலையர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.
பெருபிடுகு முத்தரையர் பிறந்தநாள் அன்று அமைச்சர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த சூழலில்தான், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள கண்ணப்பர் திடலில் வலையர் வாழ்வுரிமை மாநாடு ஜனவரி 31ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளனர். முத்தரையர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
அதே போல, கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ கருணாஸ், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் திமுக, அதிமுக கூட்டணியில் சில இடங்களைப் பெற முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுடைய ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் அறிவிக்கும்போதுதான் தெரியவரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.