சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி இதழில் அளித்திருக்கும் விளக்கத்தால் கூட்டணி உடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்.. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்துவீட்டீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு, தோழமைக்கான இலக்கணமாக இல்லை!
'தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?' என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ஒரு நாளிதழ் கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலளித்தார். அப்போது, "சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசிய போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை விமர்சனம் செய்து பேசியிருந்தார். குறிப்பாக, இங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தான் முரசொலியில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பாலகிருஷ்ணன் குறித்து பெரிய அளவில் சாடி இருந்ததாக நான் கருதவில்லை. இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டும் என அவசியம் இல்லை. தி.மு.க-விற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் முரண்பாடு எனக் கூற இதில் ஒன்றும் இல்லை. இது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க விரும்புகின்றனர்.
தி.மு.க தலைமையில் உருவாகி இருக்கும் எங்கள் கூட்டணி உறுதியாகவும், பலமாகவும் இருக்கிறது. இதே கூட்டணி தான் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.