Advertisment

'ஈசா மையத்தில் பெண் பிள்ளைகளுக்கு மூளை சலவை': முத்தரசன் குற்றச்சாட்டு

"கோவை ஈசா மையத்தில் யோகா பயிற்சி கற்று தருவதாக கூறி வசதிப்படைத்த பெண் பிள்ளைகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மூளை சலவை செய்யப்படுகிறது." முத்தரசன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
muththarasan talks about isha yoga center trichy  Tamil News

"பூண்டு, வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே, மாநிக அரசு இதை கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்." என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவும் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. அதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

கோவை ஈசா மையத்தில் யோகா பயிற்சி கற்று தருவதாக கூறி வசதிப்படைத்த பெண் பிள்ளைகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மூளை சலவை செய்யப்படுகிறது. அவர்களுக்கு மொட்டை அடிக்கப்படுகிறது. அங்கு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஈசா மையம் தொடர்பாக புகார் அளிப்பவர்கள் தங்கள் புகாரை திரும்ப பெறுகிறார்கள். அதற்கு காரணம் தெரியவில்லை. அங்கு பெண்கள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள். 

அந்த மையத்தின் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது. ஒன்றிய அரசு அவருக்கு பத்ம பூசன் விருதும் வழங்கி உள்ளது. ஈசா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகிறது. திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விமான நிலையம் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை. 

திருவனந்தபுரம் விமான நிலையம் அதானிக்கு விற்கப்பட்டதால் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒன்றிய அரசு தனியார்மய கொள்கையை கைவிட வேண்டும். உலகில் உள்ள எந்த தொழிலாளர்களுக்கும் ஏற்படாத பாதிப்பு தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். 

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து சித்தரவதை செய்கிறார்கள். மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. மோடி பிரச்சாரத்தின்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றார். ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஒன்றிய அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பு.

பூண்டு, வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.  எனவே, மாநிக அரசு இதை கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மாநகராட்சி நகராட்சிகளில் சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சொத்து வரி தொடர்பாக மாநில அரசை நிர்பந்தம் செய்வது தெரிகிறது. இருந்தபோதும் அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுப்பட வேண்டும் என்பதை நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் காலத்தின் கட்டாயம். அதற்கான முயற்சி ஏற்கனவே நடந்து வருகிறது, தொடர்ந்து நடக்கும். எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக பா.ஜ.க விற்கும் துண்டு போட்டு வைத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கருத்தை தமிழிசை வரவேற்றிருப்பதன் மூலம் அவர்கள் ஒத்த கருத்தில் இருப்பது தெரிகிறது. ஒத்த கருத்து உள்ள அந்த இருக்கட்சிகளும் கூட்டணி சேர வேண்டியது தான். ஆளுங்கட்சியின் மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அதிருப்தி இருக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள்.

சாமியார்கள் ஒரு திருமணம் மட்டுமல்ல ஓராயிரம் திருமணம் செய்து கொள்கிறார்கள். எங்களது பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும் பாசிச பாஜக தமிழகத்தில் காலூன்ற கூடாது என்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் என்னவோ அதை ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம், தொடர்ந்து அதை தீவிரப்படுத்துவோம். எல்லா காலங்களில் அரசியல் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

விஜய் வந்த பிறகும் நடக்கிறது. இது புதிதல்ல. உலகில் சிறந்த கொள்கை சோசியலிசம் தான். அதை விடுத்து விஜய் பேசுகிறார் என்றால் அவருக்கு அறிவுரை கூறுங்கள் சோசியலிசத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிய வையுங்கள் என்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Muththarasan isha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment