ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று (அக். 28) தொடங்கி, வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆண்டுதோறும் தவறாமல் பசும்பொன் சென்று விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்வர். முக்குலத்தோர் சமுதாய மக்களை பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை தங்களின் ஏழாம் படை வீடாக கருதுகின்றனர். இவ்விழா அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் அரசியல் தலைவர்கள் நாளை (அக்.30) பசும்பொன் செல்கின்றனர். முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நாளை காலை பசும்பொன் செல்கின்றனர். தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பசும்பொன்னுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையின் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நேதாஜி மற்றும் தேவர் பேரவை கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள் நேதாஜி, முத்துராமலிங்க தேவரை வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா? எனக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“