பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு அக்.30ஆம் தேதி பசும்பொன்னில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் உ. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அக்.30ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெள்ளிக்கிழமை (அக்.28) காலை வெளியானது.
இந்த நிலையில் அன்றைய தினம் இரவு முதலமைச்சருக்கு முதுகு வலி மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து சென்னையில் அவர் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வில் உள்ளார்.
இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக அவரது மகனும் சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்த உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil