Madurai-high-court | aiadmk | o-panneerselvam: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வரும் அக்டோபர் 30-ம் தேதி 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் விழாவின் போது அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் தேவர் சிலைக்கு அணிவிப்பது வழக்கம். கடந்தாண்டு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவியது. தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இருதரப்பினரும் நீதிமன்றத்தில் கோரிவைத்தனர்.
ஆனால், இந்த வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிக்கத்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரில் பேங்க் ஆப் இந்தியாவின் வங்கியிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமம் வந்தது.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. விழா முடிந்ததும் மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கியில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டப்பட்டது.
பொதுச்செயலாளர் இ.பி.எஸ்
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த கட்சியை பிடிக்கும் அதிகார போட்டியில் சட்ட ரீதியாகவும், செயற்குழு மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமி வென்றார். அதன்படி, தற்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அவர் நீடித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஓ.பி.எஸ் தரப்பினரை பதவியில் இருந்து நீக்கி, அந்த இடங்களில் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார். ஓ.பி.எஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
வழக்கு
இந்நிலையில், வருகிற 30ம் தேதி தங்கள் தரப்பிற்கு தங்க கவசத்தை வங்கி அதிகாரிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கட்சியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் ஓ.பி.எஸ் நீக்கப்பட்டுள்ளதால் தங்க கவசத்திற்கு அவர் உரிமை கோர முடியாது. அக்டோபர் 30ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு ஆணையிட வேண்டும். வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.முக பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஐகோர்ட் புதிய உத்தரவு
தொடர்ந்து வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, 30ம் தேதி குருபூஜை வரவுள்ளதால் அதற்கு முன்னதாகவே அவர்கள் சிலையை வாங்க வேண்டியுள்ளது. எனவே வருகிற 10ம் தேதி விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“