விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நன்றி வணக்கம் என்று ட்வீட் செய்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 800 என்ற திரைப்படத்தை டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பேசியதாகவும் இலங்கை அரசு ஆதரவாளர் என்றும் கூறி அவருடைய வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன், களஞ்சியம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அதே போல, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முத்தையா முரளிதரன் தன்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. நான் இலங்கை மலையகத் தமிழனாக பிறந்தது தவறா? நானும் போரால் பாதிக்கப்பட்டவன். போரினால் ஏற்பட்ட வலி எனக்கும் தெரியும். 800 அரசியல் படம் இல்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று விளக்கம் அளித்தார். ஆனாலும், தமிழகத்தில் தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என எதிர்ப்பு வலுத்து வந்தது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முத்தையா முரளிதரன் இன்று (அக்டோபர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வணக்கம் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் வருவதை நான் அழுகிறேன். எனவே, என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுய சரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதியளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
800 படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தபோதும், முன்னதாக இலங்கை ஊடகத்துக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பேன் என்று உறுதியாகக் கூறினார்.
நன்றி.. வணக்கம் ???????? pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
ஆனால், முத்தையா முரளிதரன், 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, முரளிதரனின் அறிக்கையை பதிவிட்டு நன்றி வணக்கம் என்று விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார். இதனால், விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவாரா அல்லது விலகமாட்டாரா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்று, மறைந்த முதல்வரின் தாயார் தவசாயியம்மாள் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், விஜய் சேதுபதி முதல்வருக்கு ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த விஜய் சேதுபதியிடம் ஊடகங்கள், 800 திரைப்படத்தில் இருந்து முத்தையா முரளிதரன் தங்களை விலகிக்கொள்ள கோரிக்கை வைத்து வெளியிட்ட அறிக்கைக்கு, நன்றி வணக்கம் என்று தெரிவித்து ட்வீட் செய்திருந்தீர்கள். அதற்கு என்ன அர்த்தம், படத்தில் நடிக்கிறீர்களா? இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். இதற்கு மேல், 800 திரைப்படம் குறித்து பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.