ஏப்-7 திருச்சியில் துவங்குகிறது காவிரி உரிமை மீட்பு பயணம் : ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருச்சியில் இருந்து சென்னை வரை காவிரி உரிமை மீட்பு பயணம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டிக்து வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திருச்சியில் துவங்கும் இந்தப் பயணம், சென்னையில் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வாரியம் மார்ச் 29ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதன் எதிரொலியாக மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக-வின் தோழமை கட்சிகள் பல பங்கேற்று ஆதரவு அளித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மற்றும் உரிய அழுத்தம் தராத மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக, முழு அடைப்பு போராட்டம் மற்றும் காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் மீட்பு பயணம் குறித்த தகவல்களை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

காவிரி உரிமை மீட்பு பயணம்:

– ஏப்ரல் 7ம் தேதி, சனிக்கிழமை திருச்சியில் இந்தப் பயணம் துவங்கும்.
– திருச்சியில் முக்கொம்பு பகுதியிலிருந்து துவங்கும்.
– திருச்சியில் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை இந்தப் பயணம் நடைபெறும்.
– 7 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணம், ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியின் ஆதரவோடு நடைபெறும்.
– இந்தப் பயணத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும்.

காவிரிக்காக தமிழகத்தில் திமுக நடத்தும் போராட்டங்கள், அதிமுக, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கோரினார். மேலும் நாளை (ஏப்ரல் – 5) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

×Close
×Close