ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே, சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் டிடிவி தினகரனே முன்னிலையில் நீடித்தார். இறுதியில், 89,013 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 39,545 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி டிடிவி தினகரன் - திமுகவின் கூட்டுச்சதி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஆர்.கே.நகர் தொகுதியின் பிரச்சனைகளை திரு.டிடிவி தினகரன் கவனிப்பார் என நம்புகிறேன். அதற்காக, நான் அவருக்கு முழு உறுதுணையாக இருப்பேன்", என கூறியுள்ளார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது, "குடிநீரில் கழிவுநீர் கலத்தல், மீனவர்கள் பிரச்சனைகள், எழில் நகர் குப்பைக் கிடங்கு பிரச்சனை, மார்க்கெட் பகுதியில் குடிநீர், கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஆர்.கே.நகரில் நிலவுகின்றன. இந்த பிரச்சனைகளை திரு.டிடிவி தினகரன் தீர்த்து வைப்பார் என நம்புவோம்", என தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.