பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுன்டரில் இன்று (செப்.23) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
முன்னதாக, சீசிங் ராஜா மனைவி நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டு பேசுகையில், இன்று (நேற்று) காலை 8.30 மணியளவில் உணவு வாங்கி வர என் கணவர் வெளியில் சென்றார். ஆனால் மாலை வரை அவர் வீட்டிற்கு வரவில்லை.
பின்னர் தான் அவர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. அவர் எவ்வித குற்றச் சம்பவங்களில் ஈடுபடவில்லை. எங்களுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது. எந்த பிரச்சனையும் வேண்டாம் என தனியாக வாழ்ந்து வருகிறோம். போலீஸ் போலி என்வுன்டர் செய்வதாக தகவல் வருகிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது தான் எனக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. தமிழக அரசு அவர் உயிருக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்ற வேண்டும். பொய்யான தகவல் கொடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“